மா. கண்ணதாசன் குண்டலமடுவு கிராமம், மெணசி அஞ்சல், பாப்பிரெட்டிபட்டி வட்டம், தர்மபுரி மாவட்டம்.

Monday, December 13, 2010

கம்பர்

கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்

"கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்" என்றும் "கல்வியில் சிறந்தவர் கம்பர்" என்றும் கமபர் அவர்களின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவி இருக்கிறது. இராமாயணத்தை அழகிய தமிழில் பாடி புகழ்பெற்ற கவி அரசர், சோழ நாட்டில் பிறந்து அங்கேயே பல்லாண்டுகள் கொடிக்கட்டிப் பறந்தும் தன் கடைசி நாட்களில் பாண்டிய நாடு வந்து அடைந்து விட்டார். சிவகங்கையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது நாட்டரசன் கோட்டை. கம்பருக்கு இங்கு ஒரு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இங்குதான் அவர் சமாதியும் இருக்கிறது. அவரது சமாதியின் மேல் கம்பரின் அழகான உருவச்சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டு அதற்கு பூசையும் நடக்கிறது. இதை நடத்துபவர்கள் கம்பர் செட்டியார் என்ற வம்சத்தினைச் சேர்ந்தவர்கள்.

கம்பர் சோழ நாட்டை விட்டுப் பாண்டிய நாட்டிற்குப் போக வேண்டிய காரணம் என்ன? குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியைப் பார்த்துக் காதல் கொள்கிறான் கம்பரின் மகன் அம்பிகாபதி. இந்த காதல் காவியம் ஒரு அமரகாவியம், அரசன் குலோத்துங்க சோழன் கோபம் கொண்டு, அம்பிகாபதியிடம் காதலை மறந்து விடும்படி கேட்கிறான். அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் மனம் ஒத்த தெய்வீக காதல் இருந்தமையால் அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய இருவருமே மறுக்கின்றனர். சோழன் காதலுக்கு ஒரு போட்டி வைக்கிறான். நூறு கவிதை காமரசம் இல்லாமல் அடுத்தடுத்து பாடவேண்டும், நடுவில் காமரசம் வந்தால் மரணதண்டனை என்று அறிவிக்கிறான். அம்பிகாபதியும் தன் காதல் மேல் அத்தனை நம்பிக்கையுடன் போட்டிக்கு ஒப்புக்கொள்கிறான். சபை கூடுகிறது. புலவர் ஒட்டக்கூத்தரும் அவையில் இருக்கிறார், காதலி அமாராவதியோ திரை மறைவில் தன் காதலுக்கு ஜெயம் உண்டாகப் பிரார்த்தனை செய்கிறாள். பாடல் ஆரம்பமாகிறது. கவியரசர் கம்பரும் அங்கே மன வருத்தத்துடன் இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் அமராவதி கைகளில் இருக்கும் பூக்களிலிருந்து ஒரு பூவை எடுத்து வைக்கிறாள். நூறாவது பாடலும் வந்தது வெற்றிக்களிப்பில் அமராவதி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திரை மறைவிலிருந்து ஓடி வருகிறாள். அவள் அழகில் அம்பிகாபதி தன்னை மறந்து

"சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட துவள் கொள் செவ்வாய்
நற்றேனிழொழுக நடன சிங்கார நடையழகில்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே"

அவ்வளவுதான், ஒட்டக்கூத்தர் "முதல் செய்யுள் காப்புச் செய்யுள் ஆகையால் அதைத் தவிர்த்து 99 பாடல்கள்தான் ஆகிறது. ஆகையால் இவன் போட்டியில் ஜெயிக்கவில்லை" என்றார். சோழனும் உடனே மரணதண்டனை பிரகடனம் செய்தான். மரணதண்டனை ஒருவருக்கும் தெரியாமல் நிறைவேற்றப்படுகிறது. தன் உயிர்க் காதலன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அமராவதி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். மகனைப் பறி கொடுத்த கம்பர் வேதனை கவ்வ, சோழ அரசன் மேல் சினமும் வெறுப்பும் பரவ அந்த நாட்டைவிட்டே வெளியேறினார்.

பாண்டிய எல்லையில் இருந்த நாட்டரசன்கோட்டையை அடைந்ததும் வெகுதூர நடையினால் களைத்து ஒரு மரத்தின் நிழலில் தங்கினார். ஒரே பசி கண்ணுக்கு எட்டிய தூரம் ஒன்றுமே நடமாட்டம் தெரியவில்லை.

அப்போது அங்கு வந்த சிறுவனிடம் "தம்பி ரொம்பப் பசி எடுக்கிறது. சோறு எங்கு விக்கும்?" எனக் கேட்டார்.

அவன் அதற்குப் பதிலாக, " சோறு உங்க தொண்டைல விக்கும்"
அவன் புத்திசாலித்தனத்தை வியந்தபடி,
"தம்பி இந்த வழி எங்கே போகிறது?"
"வழி எங்கும் போகல, ஐயா. இங்கிட்டுதான் இருக்கு. நீங்கதான் வழி தேடிப் போகணும்"

கம்பருக்கு இளம் சிறுவனின் புத்திசாலித்தனம் மிகவும் பிடித்தது. 'இந்தச் சிறுவனிடம் நான் தோற்று விட்டேன். நாட்டரசன்கோட்டை தான் இனி நான் தங்கப்போகும் இடம்' என்று அங்கேயே தங்கியும் விட்டார். பலர் அவரைக் கம்பர் புலவர் என்று அடையாளம் கண்டு கொண்டு அவரைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்கேயே இருந்த
கம்பர் மேலும் தியானத்தில் ஈடுபட்டு ஒரு சிறந்த சித்த புருஷரானார். மக்களிடம் அன்பும் பாசமும் பொழிந்தார். அவர்களது நோய்நொடிகளைத் தீர்த்தார், அவர் மறைவுக்குப் பின் மக்கள் மிகவும் பாசத்துடன் அவருக்கு சமாதி கட்டினர். அது கோவிலாகவே கொண்டாடப்படுகிறது. கோவிலில் பிரசாதம் கம்பர் சமாதியின் கீழ் இருக்கும் மண் தான். அதை நம்பிக்கையுடன் நாக்கில் தடவிக் கொள்கிறார்கள் மக்கள்.

இங்கு இருக்கும் மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால் இங்கு வந்து நேர்ந்து கொண்டால் தீராத வியாதியும் குணமாகும். புதிதாகப் பிறக்கும் குழந்தையைக் கம்பர் சமாதியில் இருத்தி அங்கிருக்கும் மண்ணை தேனுடன் சிறிது கலந்து நாக்கில் தடவுகிறார்கள். அந்தக் குழந்தையும் கம்பர் போல் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்று பிரார்த்தனையும் செய்கிறார்களாம். திக்கித் திக்கிப் பேசும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் பிரார்த்திக்க அவர்களுக்கு நன்றாகப் பேச்சு வந்து விடுகிறதாம். பங்குனி அஷ்டமியில் திருவிழா நடக்கிறது.

0 comments:

Post a Comment