மா. கண்ணதாசன் குண்டலமடுவு கிராமம், மெணசி அஞ்சல், பாப்பிரெட்டிபட்டி வட்டம், தர்மபுரி மாவட்டம்.

Sunday, December 26, 2010

வின்ஸ்டன் சர்ச்சில் பார்வையில் காந்திஜி

சமகாலத்தில் வாழ்ந்த இரு தலைவர்களை ஒப்பிட்டுப் பார்ப்பது, சரித்திர ஆய்வாளர்களின் பழக்கம். பிரிட்டனின் போர்க்காலப் பிரதமராக இருந்த சர்ச்சிலையும், இந்திய தேசப்பிதா என்றழைக்கப்படும் காந்திஜியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது ஒரு சுவையான அனுபவம்.÷சர்ச்சில் ஆயுத பலத்தை நம்பியவர்; அண்ணல் காந்தியோ அஹிம்சையை நம்பியவர். சர்ச்சில் அதிகார பலத்தால் இந்தியாவை அடக்கி ஆள நினைத்தவர்; அண்ணல் காந்தியோ அன்பால், சத்தியாக்கிரக வழியால் இந்திய விடுதலைக்குப் போராடியவர். சர்ச்சில் பொதுவாக இந்தியர்களையும், குறிப்பாகக் காந்தியையும் வெறுத்தவர்; இகழ்ந்தவர். அண்ணல் காந்தியோ இந்தியாவை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்களையும் நேசித்தார்; ஏன் சர்ச்சிலையும் அன்போடு நேசித்தவர். இருவரும் தாங்கள் ஏற்றுக் கொண்ட லட்சியத்தால் வேறுபட்டு நின்றார்கள். உணவு, உடை, பழக்க வழக்கம், அரசியல் அணுகுமுறை ஆகிய அனைத்திலும் வேறுபட்டு நின்றார்கள். இருவரும் இரண்டு மாறுபட்ட துருவங்கள் என்றால் எப்படி ஒப்பிட முடியும்? வேறுபட்டு நிற்கும் இருவரின் குண வித்தியாசங்களை ஆய்வு செய்து பார்க்கலாமல்லவா!÷"காந்தி' என்ற சொல்லே சர்ச்சிலுக்கு எரிச்சலை ஊட்டியது; கோபத்தை வரவழைத்தது. 23-2-1931-ல் நடைபெற்ற சிறிய தொழிலாளர் கூட்டமொன்றில் சர்ச்சில் பேசுகிறார்:÷""காந்தி ஒரு சாதாரண வக்கீல்; கீழ் தேசத்தின் "பக்கிரி'யைப் போல் காட்சி அளிப்பவர்; தூர நின்று பார்த்தால் அவர் ஆடை எதுவும் அணிந்திருக்கிறாரா, இல்லையா? என்பதில் சந்தேகம் வரும்! சற்று உற்றுப் பார்த்தால், அவர் ஒரு அரை நிர்வாணப் பக்கிரி போல் தோற்றமளிப்பார்! அது பற்றிக் கூட நான் கவலைப்படவில்லை! அதே அரை நிர்வாண உடையுடன், பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் பிரதிநிதி - வைஸ்ராய் - வாழும் மாளிகைக்குச் செல்கிறார்! அவருடன் சரிநிகர் சமமாக அமர்ந்து பேசுகிறார்: அவர் ஒரு ""ராஜ துரோகி''யாக இருக்கிறார். இதைத் தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை'' - என்கிறார்.÷அதற்கு ஓராண்டுக்கு முன்புதான் - 1930-ல் அண்ணல் காந்தி உப்பு சத்தியாக்கிரகத்தை நடத்தினார்; அதன் பயனாக மக்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் பொங்கி எழுந்தார்கள்; அப்பொழுதுதான் வைஸ்ராய் லார்டு இர்வின், அண்ணல் காந்தியின் அரசியல் பலத்தை, மக்கள் செல்வாக்கை உணர்ந்தார். சிறையிலிருந்து விடுதலை செய்து, காந்திஜியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அது கேட்டு சர்ச்சில் வெகுண்டெழுந்து பேசுகிறார்:÷""காந்தியோடு பேசுவதையும், ஒப்பந்தம் செய்து கொள்வதையும் நான் எதிர்க்கிறேன்; பிரிட்டானியர்கள் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும்; பிரிட்டிஷ் வணிகமும் வெளியேற்றப்பட வேண்டும் என்கிறார் காந்தி. பிரிட்டிஷார் ஆட்சிக்குப் பதிலாக, இந்தியர்களின் ஆட்சியைக் கொண்டுவரப் பார்க்கிறார். காந்தியோடு நம்மால் ஒத்துப் போகவே முடியாது'' என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.÷""அதிகார பலத்தாலும், உறுதியான செயல்பாட்டாலும் தான், நாம் உலகின் பெரும்பகுதியை ஆள்கிறோம்; ஆனால் வைஸ்ராய் இர்வின் பயந்தவராக, பலவீனமானவராக நடந்து கொள்கிறார். அப் பலவீனத்தை காந்தி நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்'' என்றார் சர்ச்சில்.÷26.3.1931 அன்று அரசியல் நிர்ணயகுழுவில் பேசும்போது, தன்னை அறியாமல் அண்ணல் காந்தியைப் புகழ்ந்து விடுகிறார் சர்ச்சில். ஆம்!÷""காந்தி இந்திய மக்களை முழுமையாக அறிந்தவர்; அவர்களைப் போலவே உடை அணிகிறார்; அவர்கள் உண்ணும் உணவையே தானும் உண்கிறார்; அவர்கள் மொழியிலேயே பேசுகிறார். இதுபற்றிக் கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் தனக்கு வேண்டிய உணவை, வைஸ்ராய் மாளிகைக்குக் கொண்டு வரச் சொல்லி, அவர் முன்னால் உணவருந்துகிறார்! இது பிரிட்டிஷ் சக்கரவர்த்தியின் பிரதிநிதியை மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசையே அவமதிப்பதாகும்! அதன் மூலம் சாதாரண இந்திய மக்கள், பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் துணிவைத் தூண்டி விடுகிறார் காந்தி'' என்கிறார் சர்ச்சில்.÷ஒருமுறை ""காந்தியமும், அதன் அணுகுமுறையும் முழுமையாக நசுக்கப்பட வேண்டும்'' என்றார்.÷இரண்டாவது உலகப் போரின்போது, பிரிட்டன் கூட்டணி அரசின் பிரதமராகப் பொறுப்பேற்றார் வின்ஸ்டன் சர்ச்சில். அப்பொழுது லேபர் கட்சியைச் சேர்ந்தவர்கள் காந்திஜியின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நம்பினார்கள். ஹிட்லர் முசோலினியின் சர்வாதிகாரத்துக்கு எதிராகவும், பிரிட்டனின் சுதந்திரத்துக்காகவும் போராடும் நாம், இந்தியாவின் சுதந்திரத்தை, காந்தியின் கோரிக்கையை எப்படி மறுக்க முடியும்? எனக் கேட்டார்கள். அந்த வாதத்தின் நியாயத்தையும் சர்ச்சில் ஏற்க மறுத்தார்.÷வியக்கத்தக்க ஏன்? வருந்தத்தக்க தகவல் ஒன்றும் உண்டு! 1943-ல் காந்திஜி உண்ணா நோன்பு இருந்தபோது, அவர் இறந்துவிடுவார் என்றுகூட எதிர்பார்த்தாராம், நம்பினாராம் சர்ச்சில். எவ்வளவு ஆழ்ந்த வெறுப்பு, கோபம் காந்திஜியின் மீது சர்ச்சிலுக்கு!÷1944-ம் ஆண்டு காந்திஜி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இங்கிலாந்து அரசு இந்தியாவிலிருந்து விலகிக் கொள்வதற்கான காலஅட்டவணை தயாரிப்பது தொடர்பாக, காந்திஜியுடன் கடிதப் போக்குவரத்து தொடங்கினார் வைஸ்ராய். அப்பொழுது வெகுண்டெழுந்த சர்ச்சில்:÷""காந்தி ஒரு துரோகி: சிறையில் தள்ளப்பட வேண்டியவர் அவர். அவரோடு பேசுவதையும், கடிதப் பரிமாற்றம் செய்வதையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது'' என்று கடுமையாகவும், கண்டிப்பாகவும் பேசினார். இந்தியா பற்றி சர்ச்சில் எடுத்த நிலையை, பெரும்பாலான பிரிட்டன் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.÷2002 டிசம்பரில் வெளிவந்த ""நியூ ஸ்டேட்ஸ்மென்'' பத்திரிகை சர்ச்சில் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதுகிறது. ""பெரும்பாலான ஆங்கிலேயர்களிடமிருந்து மாறுபட்டு நிற்பவர் சர்ச்சில்; அவர் ஒரு மிக மோசமான பிரிட்டானியர்; மிக மிக மோசமான ராஜ விசுவாசி; இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தவர்; நிறவெறி பிடித்தவர்; காந்தியை வெறுத்தவர்.÷அவரது குறிப்பிடத்தக்க சாதனைகள் இரண்டே தான். அவை: இரண்டாவது உலகப் போரின் போது, தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்த இங்கிலாந்தை, வெற்றிப் பாதைக்கு நடத்திச் சென்றது. அடுத்தது இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றது''.÷அண்ணல் காந்தி ஆயுதம் தாங்கிய படை நடத்தவில்லை; அன்பால், சத்தியத்தால் மக்களை நல்வழிப்படுத்தினார். அண்ணல் காந்தி நோபல் பரிசு பெறவில்லை; ஆனால் அதைவிட உயர்ந்த சிம்மாசனம் ஆன ""மக்கள் இதயங்களில்'' இடம் பிடித்தார்; உலக அமைதிக்கு வழிவகுத்தார். இந்தியாவுக்கு அஹிம்சை வழியில் விடுதலை தேடித் தந்தார்; இலங்கையும், பிற ஆசிய ஆப்பிரிக்க நாடுகளும் விடுதலை பெற வழிவகுத்தார். மகான் புத்தரைப் போல், ஏசுநாதரைப் போல் மக்கள் நல்வழிப்படுத்தினார். தனக்காக வாழாமல் உலகுக்காக வாழும் உத்தமர் ஆனார். உலகம் போற்றும் ""மகாத்மா'' ஆனார்.÷""காந்திஜி, சர்ச்சில் - இருவரில் எவர் பெரியவர் உயர்ந்தவர் என்ற ஆய்வு தொடங்கினால், காந்திஜியோடு போட்டியிடுவதற்கு எவ்விதத்திலும் தகுதியில்லாதவர் சர்ச்சில்'' என்கிறார் ஏ.ஏ. கில் என்ற ஆங்கில எழுத்தாளர்.

0 comments:

Post a Comment