மா. கண்ணதாசன் குண்டலமடுவு கிராமம், மெணசி அஞ்சல், பாப்பிரெட்டிபட்டி வட்டம், தர்மபுரி மாவட்டம்.

Monday, December 13, 2010

சபரிமலை யாத்திரையின் சிறப்புகள்


சபரிமலை மிகச் சக்தி வாய்ந்த திருத்தலம். அங்கு திருமால், சிவன், சக்தி ஆகிய 3 பேரின் மொத்த அவதாரமான ஐயப்பன் குடிகொண்டுள்ளார். 18 சித்தர்களைக் அடிப்படையாக வைத்தே அங்கு 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இருமுடி இல்லாமல் சுவாமியை தரிசனம் செய்ய தடைசட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.


இருமுடியின் தத்துவமே தன் பாவத்தை தானே சுமப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான். தலையில் தூக்கி இருமுடியை வைத்ததுமே அவரது பாவங்கள், தவறுகள் எல்லாம் மனதிற்குள் வர வேண்டும். அதற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் எழ வேண்டும்.

ஒரு மண்டலம் விரதம் இருந்து அதற்கு பின்னர் இறைவனை தரிசித்து மன்னித்தருள வேண்டினால் பலன் கிடைக்கும்.

ஐயப்பனுக்கு சாஸ்தா என்றொரு பெயரும் உண்டு. சாஸ்தா என்றால் காவல் தெய்வம், வன தெய்வம், எல்லை தெய்வம் என்று பொருள். சனி தசை அல்லது காலகட்டம் நடைபெறும் போது எந்தக் கோயிலுக்கு சென்றும் பலன் கிடைக்கவில்லை என்றால் சாஸ்தா வழிபாட்டை மேற்கொள்வது நிச்சயம் பலனளிக்கும்.

காடு, மலைகளுக்கு உரிய கிரகம் சனி. எனவே ஐயப்பனை வழிபடச் செல்லும் போது காடு, மலைகள் வழியாக பயணிப்பதாலும், கடுமையாக விரதம் இருந்து வழிபடுவதாலும் அது பெரும் பரிகாரமாக கருதப்படும்.

அக்குப்பஞ்சர் போன்ற மருத்துவ முறைகளில் தலையில் உள்ள சக்தி மையங்களை இயக்கி நோய்களுக்கு சிகிச்சை அளிப்பர். முற்காலங்களில் தலையில் சுமை வைத்துச் தூக்கிச் செல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அதுபோன்ற பணிகள் ஏதும் இல்லாத காரணத்தால், கபாலத்தில் உள்ள சக்தி மையங்கள் இயக்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றன. எனவே, இருமுடியை தலையில் சுமப்பதால் உடல்நிலையும் மேன்மையடையும்.ஐயப்பன் கோயில் வழிமுறைகள், நெறிமுறைகள் அனைத்தும் ஆழமான உள்அர்த்தங்களை உடையவை. இருமுடிவை தலையில் வைத்துக் கொண்டு வீட்டை விட்டுக் சபரிமலைக்கு புறப்படும் போது “போய் வருகிறேன்” என்று கூறிச் செல்ல மாட்டார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் எல்லாம் இறைவன் செயல், எதுவேண்டுமானாலும் நடக்கலாம், இறைவனை நம்பியே அனைத்தும் உள்ளது என்பதால் சொல்லாமலேயே கிளம்ப வேண்டும்.

மனிதனுக்குள் ஈசன் இருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவே சாமிகள் இருமுடி அணிவதற்கு முன்பாக ஒருவர் மற்றவர் காலில் விழுந்து வணங்குவர். அதாவது உனக்குள்ளும் கடவுள் இருக்கிறார்... எனக்குள்ளும் கடவுள் இருக்கிறார். என்னை நீ வணங்கு, உன்னை நான் வணங்குகிறேன் என்பதே அதன் உள் அர்த்தம். காலில் விழும் சமயத்தில் வயது, அந்தஸ்து, ஜாதி, பணக்காரன்-ஏழை பாகுபாடு இவை அனைத்தும் அடிபட்டுவிடும். இது அனைவரும் சமம் என்ற நிலையை மனதளவில் உணர்த்திவிடும்.

சனியின் நிறம் கருப்பு என்பதால், பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் கருப்பு நிறத்தில் உடை உடுத்துகின்றனர். சிகை மழிக்காமல் இயற்கையான முறையில் வாழ்வதும் சனியின் வெளிப்பாடுதான்.

ஐயப்பனுக்காக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், அந்தக் காலத்தில் தங்கள் பலம் என்ன, பலவீனம் என்பதை உணர்ந்து விடுவர். ஏதோ சபரிமலைக்கு சென்றோம், காடு, மலைகளை சுற்றிப்பார்த்தோம், ஆற்றில் குளித்தோம், ஐயப்பனை தரிசித்தோம் என்று இல்லாமல், அவர்களைப் பற்றி அவர்கள் உணர்ந்து கொள்ளவே இந்த விரதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் விந்தணுக்களை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு ஒரு காரணம் உண்டு. சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க காடு, மலைகளை கடக்கத் தேவையான சக்தியை இந்த விரத காலத்தில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த நடைமுறை உருவாக்கப்பட்டது.

ஐயப்ப சாமிகள் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும் என்று கூறுவது, சபரிமலையில் நிலவும் தட்பவெப்பத்திற்கு ஏற்ப உடலை பக்குவப்படுத்திக் கொள்வதற்காகவே. காலை, மாலை 2 வேளையும் குளிர்ந்த நீரில் குளிப்பதால், குளிரை சமாளிக்கும் திறன் கிடைப்பதுடன், காமமும் கட்டுப்படுத்தப்படும். இதனால் ஒரே விஷயத்தில் இரு பலன்கள் கிடைக்கும்.

குளிர்ந்த நீரில் குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்காக ஐயப்ப சாமிகளுக்கு சுக்கு கஷாயம் கொடுப்பார்கள். அது சளி பிடிப்பதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வழங்கப்படுகிறது.

மாலை அணிவதால் கிடைக்கும் பலன்கள் என்ன?

துளசி மணி மாலைக்கு என்றே தனியாக சில மருத்துவ குணங்கள் உண்டு. அதனை அணிந்து கொண்டால் எளிதில் சளிப் பிடிக்காது. இதயத்திற்கு மசாஜ் செய்வதைப் போன்றதொரு பலனைக் கொடுக்கும். அதில் உள்ள மூலிகைகள் நமது உடலில் வியர்வையுடன் கலந்து உள்ளுக்குள் செல்வதால் தேகம் பொலிவு பெறும்இதேபோல் தாமரை மணி மாலை, ருத்ராட்ச மாலைகளும் ஒருவரது உடலை மேன்மையாக வைத்துக் கொள்ள உதவும். ருத்ராட்சத்திற்கு ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும் ஆற்றல் உள்ளதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

அதனால்தான் ஐயப்ப சாமிகள் மாலை அணியும் போது அதில் உள்ள மருத்துவ குணங்களை உடல் ஏற்றுக் கொள்கிறது.

ஒரு சில சாமிகள் மாலை அணியாமலேயே 48 நாட்கள் விரதம் மேற்கொள்ளுவர். பின்னர் மலைக்கு செல்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக மாலைகளை கழுத்தில் அணிந்து கொண்டு ஐயப்பனை தரிசிக்கச் செல்வர். இதுபோன்று செய்வதால் மேற்கூரிய பலன்களை அவர்களால் பெறமுடியாது.

மேலும், கழுத்தில் ஆபரணம் இருப்பது நல்ல பலன்களைக் கொடுக்கும். அது தங்கமாகவும் இருக்கலாம், மாலைகளாகவும் இருக்கலாம். இதனை அக்குப்பஞ்சர் முறைப்படி பார்த்தால் கையில் மோதிரம், மணிக்கட்டில் கடிகாரம், கழுத்தில் மாலை/தங்கச் செயின் ஆகியவற்றை அணிவதால் அப்பகுதியில் உள்ள சக்தி மையங்கள் தூண்டப்படுகிறது. இது உடல்நலத்திற்கு பலன் அளிக்கும்.

அதேவேளையில், சாமிகள் தங்கள் கழுத்தில் மாலை அணிவதன் மூலம் அவற்றை அடிக்கடி பார்க்க முடியும். அதன் நெருடல் மனதில் எப்போதும் ஐயப்பனை நினைக்கச் செய்யும். இதனால் தவறான எண்ணங்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும்.
விரத காலத்தில் சாமிகள் குடும்பத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறுவது எதற்காக?


சிலர் கன்னிச் சாமிகளாக இருப்பார்கள். ஒரு சிலர் திருமணம் ஆனவர்களாக இருப்பார்கள். இதில் திருமணம் ஆனவர்களுக்கு மனைவி, குழந்தைகள் இருந்தாலும் அவர்களை நாடாமல் ஒரு மண்டலம் இருந்து பார். அதன் பிறகு உலக வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வாய் என்று விளக்குவதற்காகவே அதுபோன்று இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

ஒரு மண்டலம் என்பது 2 பௌர்ணமி ஒரு அமாவாசை அல்லது 2 அமாவாசை ஒரு பௌர்ணமிக்கு இடையிலான 48 நாள் காலகட்டம். இக்காலத்தில் ஒருவரது கிரக நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். எனவேதான் 48 நாட்கள் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உணவுக் கட்டுப்பாடு:
சாமிகள் அதிகம் காரம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளக் கூடாது, வெளி உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறுவது உணவுக் கட்டுப்பாட்டின் வெளிப்பாடு. உடலும், மனமும் இதனால் கட்டுப்படும்.எனக்குத் தெரிந்த சில மருத்துவர்களை சந்தித்த போது ஐயப்பனுக்கு மாலை அணிந்ததால் நீண்ட நாட்களாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த பலர் திருந்தி இன்று சிறப்பாக வாழ்ந்து வருவதாகக் கூறுவார்கள். இதேபோல் கெட்ட பழக்கங்கள் சிலவற்றையும் கைவிட ஐயப்பனுக்கு மாலை அணியுங்கள் என்று வலியுறுத்துகிறோம். இறைவன் அருளால் சிலர் தீய பழக்கங்களில் இருந்து விடுபடுகின்றனர்.
செருப்பு அணியக் கூடாது:
“கல்லும், முள்ளும் சாமிக்கு மெத்தை” என்ற ஐயப்பனை நினைத்துப் பாடிக் கொண்டே சபரிமலையில் ஏறுவது அனைவரும் சமம் என்பதை சுட்டிக்காட்டவே.

ஏ.சி. அறையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரியானாலும், அதே அலுவலகத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியராக இருந்தாலும் சபரிமலைக்கு செல்லும் போது காலில் செருப்பு அணியக் கூடாது. மன்னாதி மன்னாக இருந்தாலும் இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கருத்தைத்தான் இந்த வழிமுறை வலியுறுத்துகிறது.

18 படி ஏறுவது எதனால்: பதினென் சித்தர்களை அடையாளம் காட்டக் கூடிய வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நமது மனதிலேயே 18 படிகள் (நிலைகள்) உள்ளது. அந்த 18 நிலைகளையும் நாம் கடப்பதற்கு உதவும் வகையிலேயே 18 படிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இருமுடியுடன் சாமியை தரிசித்த பின்னர், அதனைப் பிரித்து அட்சதையை (பச்சரிசி) எடுத்துக் கொள்வதுடன், நெய்த் தேங்காயில் உள்ள நெய்யை எடுத்துக் கொண்டு தேங்காயை உடைத்து அக்னி குண்டத்தில் போட்டு எரித்து விடுகின்றனர்.

இதன் உள்அர்த்தம் என்னவென்றால் நமது பாவங்களையும், தவறுகளையும், அகங்காரம், கோபம் ஆகியவற்றையும் விட்டுவிட்டு, விரதத்தால் கிடைத்த பலனை, சக்தியை (நெய்) மட்டும் அங்கிருந்து எடுத்துக் கொண்டு வந்து மற்றவர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கிறோம் என்பதுதான்.
மாளிகைபுரம் மஞ்சள் மாதா கோயில் ஐயப்பன் கோயிலில் இருந்து தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது ஏன்?
இதற்கு காரணம் உண்டு. நமக்கு எல்லோரும் இருந்தாலும் நாம் அவர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவே மாளிகைபுரம் மஞ்சள் மாதா கோயில் சற்றே தொலைவில் கட்டப்பட்டுள்ளது.

மனைவியாக இருந்தாலும், மகன்/மகளாக இருந்தாலும் அவர்களிடம் அதிகாரம் செலுத்தாமல், அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுத்து, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடத்த வேண்டும். அதற்கு அவர்களை விட்டு சற்று விலகினால் நம்முடையை எண்ணங்களை அவர்களிடம் திணிக்காமல் இருக்கலாம்.

குடும்பத் தலைவனாக இருந்தால் தலைவனாக மட்டும் இருந்து கொள். குடும்ப உறுப்பினர்களிடம் உனது எண்ணங்களை திணிக்காதே என்பதே ஐயப்பன் உணர்த்தும் உவமை.
உனக்கென்று ஒரு எல்லை உள்ளது. அதனைத் தாண்டாதே என்பதால்தான் அவர் ஒவ்வொருவரையும் ஒரு எல்லைக்கு அப்பால் வைத்துள்ளார்.

0 comments:

Post a Comment