ஜீவாவின் அபூர்வக் கட்டுரை
பொதுவுடைமை இயக்கத்தின் அபூர்வத் தலைவர்களில் ஒருவரான ப.ஜீவானந்தம் அவர்கள் ம.பொ.சிவஞானம் நடத்திய ‘தமிழ்முரசு’ 1946 ஆகஸ்டு இதழில் எழுதிய கட்டுரை இது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று முரசறைந்தான் புறநானூற்றுப் புலவன். “யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்றார் திருமூலர். “சேரவாரும் ஜெகத்தீரே” என்று எண்டிசையும் எதிரொலிக்க சங்கநாதம் செய்து, அகிலத்தை அரவணைத்தார் தாயுமானவர். உலகத்தை நாடாகவும் வீடாகவும் கண்ட உள்ளம்; “உள்ளியதெல்லாம் உயர்வு உள்ளிய உள்ளம்” தமிழனின் உள்ளம். காலமறிந்து, புதுமைக்குப் புதுமை செய்வது தமிழனின் மரபு.
“நன்றென்று கொட்டு முரசே – இந்த
நானில மாந்தருக் கெல்லாம்”
என்றும்,
“வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரதமணித் திருநாடு”
என்றும் மறுமலர்ச்சி சகாப்தத்தில் தமிழ் முரசு ஒலிக்கிறது.
உலகம் தழுவிய தமிழன், “இந்தியா எங்கள் நாடு” என்று இசைமுழக்கம் செய்த தமிழன், “வாழ்க நற்றமிழர்” என்று வாழ்த்தியது ஏன்? தமிழினத்தைச் சிறப்பாகக் குறிப்பிட்டு, பல்லாண்டு பாட வேண்டியது எதற்காக? காரணம், காலத்தின் சிறப்பு.
தமிழ், தமிழகம், தமிழினம் என்று இன்று பேசாத தமிழன் இல்லை எனலாம். இன உணர்ச்சி அலைமேல் அலையாக மோதுகிறது. “கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும்” காவிரிப் பெருக்காகி வருகிறது.
தமிழ் எது? என்ற கேள்வியைக் கிளப்பி, சர்வ சந்தேகப் பிராணிகள் கூட இன்று மண்டையை உடைத்துக் கொள்வதில்லை. தமிழர் யார்? என்ற வினா சிலபல ஆண்டுகளாக பலபட அடிபட்டு வருகிறது. தமிழகம் எது? என்பதற்கு விடையளிக்கவும், இன்று எழுச்சி பெற்ற தமிழன் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட மும்முரமாக முயல்கிறான்.
“எங்கள் தமிழ் மொழி” என்று மார்பில் கைவைத்து மீசையை முறுக்கித் தமிழ் வளர்க்கத் தொடங்கியதும், செந்தமிழ் நாடு, “தந்தையர் நாடு” என்று நிமிர்ந்து நின்று உரிமை பாராட்டியதும் தேசிய இயக்கத்தின் விளைவுகள். கொடுங்கோன்மையை முறியடிக்கவும், அயலரசை ஆங்கில அரசாட்சியை அகற்றவும், குமுறி எழுந்த தேசிய இயக்கம் பரந்து வளர்ந்து பொது மக்களின் ஏகாதிபத்ய எதிர்ப்பு இயக்கமான பின்னரே, தேசீய இனங்களின் எழுச்சி தெளிவாக உருவெடுத்து ஓங்கி வருகிறது. தமிழின எழுச்சியும் இந்த உண்மைக்கு விலக்கன்று.
தமிழினம் ஓங்க, தமிழகம் செழிக்க, தமிழர் குடி அரசு மலர, தமிழினத்தை ஒன்றுபடுத்துவதே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும்.
“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே”
என்ற புதிய தமிழினத்தின் ‘பள்ளுப்பாட்டை’ முதன்முதலில் உலகுக்கு அறிவித்தவன் பாரதி. “தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு” என்று பாடிய நாமக்கல் கவிஞர், பாரதி வழியில் வந்தவர். தமிழினத்தைப் பற்றிய இவர்கள் கருத்துக்களையெல்லாம் ஏற்று பலதரப்பட்ட அரசியல் கட்சியினரும் தமிழினத்தைப் பற்றிய பொதுவான ஒரு கருத்தை உருவகப்படுத்தி உழைக்க வேண்டும்.
“தமிழ்நாடு தமிழருக்கே” என்ற கோஷம் தமிழ்நாட்டில் கேட்கத் தொடங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. தொடக்கத்தில், குருட்டு வேகத்தில் மொட்டையாகக் கிளப்பப்பட்ட கோஷம், இன்று சதையும் ரத்தமும் பெற்றுத் தெளிந்த உருவமடைந்து விட்டது.
தெலுங்கன், ‘விசால ஆந்திரம்’ கோருகிறான். மலையாளி, ‘நவீன கேரளம்’ வேண்டுகிறான், கன்னடத்தான் ‘சுதந்திரக் கன்னடத்தை’ நிறுவ முயல்கிறான். தமிழன் ‘புதிய தமிழகத்தைக்’ குறிக்கோளாக்கி முன்னேறுகிறான். இன எழுச்சியின் இயற்கையான வளர்ச்சியை இங்கு காண்கிறோம்.
இனப்பிரச்சினை உலகத்திற்கெல்லாம் ஒரு மாதிரி; தமிழனுக்கு மட்டும் வேறுமாதிரியாக இருக்க முடியாது. தெலுங்கனுக்கும் கேரளத்தானுக்கும், இனப்பிரச்சினை மொழி, பண்பாடு, இயற்கைத் தாயகம், மனப்பான்மை ஒருமிப்பு, பொருளாதாரப் பொது வாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. உலக முழுவதிலும் இன்று தேசிய இனங்கள் இந்த அடிப்படையிலேயே உருவாகியிருக்கின்றன. இதையொட்டியே தமிழனும் தனது கொள்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தமிழினம் பரிபூரண அரசுரிமை பெற இந்தியா விடுதலை பெற்றாக வேண்டும். அதாவது பிரிட்டிஷ் ஏகாதிபத்ய ஒழிப்பின் பிறகுதான் சுதந்திரத் தமிழகம் மலர முடியும். இதைச் செய்ய வல்லார், இந்தியப் பொது மக்களோடு அரசியல் போராட்டத்தில் முன்னேறிவரும் தமிழ்ப் பொது மக்களே. மக்களின் வர்க்கப் போராட்டமாகிய முதலாளித்துவ – நிலச்சுவான்தாரித்துவ எதிர்ப்புப் போராட்டம் முதிரமுதிர, அரசியல் போராட்டமும் வன்மையும் கூர்மையும் வாய்ந்து வருகிறது. வர்க்க உணர்ச்சியும் அரசியல் உணர்ச்சியும் வாசல் புறத்தோடு பொதுமக்கள் உள்ளத்தில் புகுந்தால், கொல்லைப்புறத்தோடு குருட்டு நம்பிக்கையும் சாதி, மத பேத உணர்ச்சிகளும் குண்டோட்டம் குதிரையோட்டமாக ஓடும். தொழிற்சாலைகளிலும் வயற்காடுகளிலும் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்ப் பொதுமக்கள் ‘விதி’யின் சதிக்கும், சாதிமத சண்டித்தனத்திற்கும் இரையாகிறவர்களல்லர். வாழவும், ஆளவும் தன்னம்பிக்கையுடன் ஒற்றுமையைக் கட்டுகிறவர்களே.
பொதுமக்கள்தான் புதிய தமிழினத்தின் பிரதிநிதிகள். இவர்கள் நடத்தும் போராட்டங்களில் தீவிரப் பங்கெடுத்து வெற்றிகண்டு புதிய தமிழகத்தைக் காண வேண்டும்.”
0 comments:
Post a Comment