மா. கண்ணதாசன் குண்டலமடுவு கிராமம், மெணசி அஞ்சல், பாப்பிரெட்டிபட்டி வட்டம், தர்மபுரி மாவட்டம்.

Monday, December 20, 2010

தந்தை பெரியார்


1879 செப்டம்பர் 17: ஈரோட்டில் பெரியார் பிறந்தார். பெற்றோர்: வெங்கட்ட (நாயக்கர்) – சின்னத்தாயம்மாள், உடன்பிறந்தோர்: ஈ.வெ.கிருஷ்ணசாமி,கண்ணம்மாள், பொன்னுத்தாய்.

1885 – 1889: வயது 6 முதல் 10 வயதுவரை 5 ஆண்டு பள்ளிப்படிப்பு

1895: திராவிடத்தைச் சதியால் அடக்கி ஆண்ட ஆரியத்தை கூர்மதியால் (தமது இல்லத்தில் நடக்கும் மதப்பிரசங்கங்களில்) குறுக்குக் கேள்விகேட்டு பொய்யையும், புரட்டையும் கற்பனையையும் தோலுரித்து பகுத்தறிவுப் புரட்சியைத் தொடங்கிவிட்டார் இயல்பாய் இளம்வயதிலேயே.

1898: பெருவணிகர் ராமசாமி, 13 அகவை ஏழை நாகம்மையாரை வாழ்க்கைத் துணைவராக விரும்பி மணந்தார்

1902: ஜாதிஒழிப்பு ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து ஜாதியினர், மதத்தினருடன் சமபந்திபோஜனம் நடத்தினார்.

1904: பகுத்தறிவை ஏற்கமுடியாத பார்ப்பனச் சூழ்ச்சியால் தந்தையின் கடும் கண்டனத்தால் துறவு பூண்டு காசி சென்றார். அறிவுத் தெளிவு தந்த காசி அவமானம். தானச்சத்திரம் கட்டியதோ திராவிடர்; தண்டச்சோறு உண்பதோ பார்ப்பனர் மட்டும். காசியில் பார்ப்பன மோசமும், வேசிகளின் வேசமும், திராவிடர்கள் பிச்சைக்காரர்களாகவும், கங்கையில் எங்கும் பிணங்கள் மிதந்ததைப் பார்த்ததும் துறவைத் துறந்து, உறவை உணர்ந்தார்.

1905-06: பவுத்தம் போற்றி, பகுத்தறிவை ஊட்டி, பார்ப்பனரின் இந்துமதத்தைச் சாடிய ஆதிதிராவிடரான பண்டிதமணி அயோத்திதாசரை மிகவும் நேசித்தார். இந்துமதம், ஜாதிமுறை, இதிகாசப்புரட்டு, வேத சாஸ்திரம் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடிய, நாத்திகத்தைச் சூடிய கரூர் புலவர் மருதையாப் பிள்ளை மேலும் இவரிடம் நுண்ணறிவுப் பகுத்தறிவுச் சிந்தனையை வளர்த்தார். தமிழறிஞர் துறவி கைவல்யம் அடிகளார், கல்விமான் பொறியாளர் பா.வே.மாணிக்க நாயக்கர் போன்றோரின் உள்ளார்ந்த நட்பும் திராவிட ஒளி உயர்ந்தோங்க வழிவகுத்தது.

1909: தனது தங்கையின் மகளுக்கு விதவை மறுமணம் செய்வித்தார்.

1918: சேலம் நகரமன்றத் தலைவர் திரு.சி. இராசகோபாலாச்சாரியார் (இராஜாஜி) நண்பரானார்.

1919: திரு.பி.வரதராசுலு நாயுடு, திரு.சி.இராசகோபால ஆச்சாரியார் ஆகியோர் திரு.எம்.கே.காந்தி வழிநடத்தும் காங்கிரசில் சேருமாறு அழைத்து விரும்பி வேண்டிக்கொண்டனர். நகரமன்றத் தலைவர் பதவியைத் துறந்து, காங்கிரசில் உறுப்பினராகத் தம்மை இணைத்துக்கொண்டார்.

1920: 29 பொதுப் பொறுப்புகளைத் தூக்கி எறிந்தார். பவுன் 10 ரூபாய்கூட விற்காத காலத்தில் ஆண்டிற்கு 20,000 ஆயிரம் ரூபாய் வருமானமுள்ள மூடி, வணிகத்தைத் துறந்தார். 1921: மதுவிலக்குக் கொள்கை; கள்ளுக்கடை மறியலில் தங்கை கண்ணம்மாளுடனும், துணைவியார் நாகம்மை யாருடனும் பங்கேற்று ஒரு மாதம் சிறை சென்றார். தம்முடைய 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார்.

1922: பெரியார் காங்கிரசுத் தலைமையை ஏற்றார். திருப்பூர் மாநாட்டில் ஆதிதிராவிடர் கோயில் நுழைவுத் தீர்மானம் கொணர்ந்தார். வருணதரும பார்ப்பன எதிர்ப்பால் ஆரியரின் மதக்கருவியான மனுசுமிருதி, இராமாயணம் போன்றவற்றை கொளுத்தப்போவதாக அறிவித்தார்.

1923: கோயில்களில் பார்ப்பனச் சுரண்டல் வேட்டைக்கெதிராக பனகல் அரசர் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி சட்டசபையில் சட்டத்தை நிறைவேற்றி இந்துசமய அறக்கட்டளை வாரியம் அமைக்க வழிசெய்தார்.

1924: 1920களிலிருந்து மாநாடுகளில் இடஒதுக்கீட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றினார். நீதிக்கட்சியாரின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு கொள்கையை பெரிதும் பாராட்டினார். ஓர் ஆண்டுக்கும்மேல் நடைபெற்ற வைக்கம் முதல் மனித உரிமைப் போராட்டத்தில் பங்குகொண்டு இரண்டு முறை சிறைவாசம், தீண்டாமை விலக்கி வெற்றிபெற்று வைக்கம் வீரரானார். அயல்நாட்டுப் பொருள்களைப் புறக்கணித்துப் பிரசாரம் செய்து செப். 11 இல் சிறை புகுந்தார். ஜாதிவெறி பிடித்த வ.வே.சு.அய்யரின் சேரன்மாதேவி குருகுலத்தின் வருணாசிரம நடவடிக்கையை எதிர்த்து, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் செயலாளர் பதவியைத் தூக்கி எறிந்தார். ஆயினும் தன்னலமற்ற அரும்பணிகளால் மீண்டும் தலைவராக்கியது.

1925- டிசம்பர்: காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொண்டுவர முயன்று தோல்வி. காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். காஞ்சியில் பார்ப்பனரல்லாதார் மாநாடு: தமிழரின் இனம், மொழி, நாகரிகம் காக்கவேண்டியது கட்டாயத் தேவையென முழங்கினார்.

1927: ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கமுடியாது என பெங்களூரில் காந்தியாரிடம் பெரியார் கடுமையாக வாதாடினார்.

1928: பெரியார் ஆதரவில் முத்தையா (முதலியார்) வகுப்புவாரி இடஒதுக்கீடு அரசு ஆணை பிறப்பித்தார்.

1928- நவம்பர் 7: ரிவோல்ட்(கிளர்ச்சி) ஆங்கில இதழைத் தொடங்கினார்.

1929- பிப்ரவரி: செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மகாநாடு, புரட்சித் தீர்மானங்கள் நிறைவேற்றம். சுயமரியாதை திருமணம் எனும் புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை பெரியார் அறிமுகம் செய்து நடத்திக் காட்டினார். ஜாதிமறுப்பு -மத மறுப்பு – விதவை மறுமணத்தை ஊக்கப்படுத்தினார்.

1929:- மலேசியா சுற்றுப் பயணம்செய்தார். பினாங்கு துறைமுகத்தில் 50,000_க்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்றனர். ஈப்போ நகரில் தமிழர் சீர்திருத்த சங்கத்தில் மாநாட்டைத் துவக்கி வைத்து உரை.

1930: தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டமுன்வரைவை பெரியார் ஆதரித்தார்.

1932: கிரீன், துருக்கி, சோவியத் ரஷியா, ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துகல் நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து உலக அனுபவங்களுடன் திரும்பினார். 1933: நாகம்மை மறைவு; திராவிடன் இதழ் தொடர்பாக சிறைவாசம்; புரட்சி வார இதழ் தொடக்கம்; ஈரோடு சமதர்மத் திட்டம் உருவாதல் அரசு வெறுப்புக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

1934: புரட்சி இதழ் நிறுத்தப்பட்டு பகுத்தறிவு இதழ் தொடக்கம்.

1935: பெரியார் சமதர்மத் திட்டம் ஏற்கப்பட்டதால் நீதிக்கட்சிக்கு ஆதரவு. விடுதலைப் பத்திரிகை பெரியார் பொறுப்பில் வந்தது.

1936: இந்தியை பொதுமொழியாக்குவதை எதிர்த்தார்.

1937: தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கத்தை முதலில் எழுப்பினார்.

1938: இந்தித் திணிப்பை எதிர்த்துச் சிறை சென்றார். பெண்கள் மாநாட்டில் பெரியார் பட்டம் பெற்றார். டிசம்பர் 29-இல் சிறையில் இருக்கும்போதே நீதிக் கட்சிக்குத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். சோதனைக் குழாய் குழந்தை பற்றி உரையாற்றினார்.

1941: பெரியார் முயற்சியால் தென்னிந்திய ரயில்வே ஓட்டல்களில் 20.03.1941_ ஜாதிபேதம் ஒழிந்தது.

1942: சென்னை ராஜதானி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்க இரண்டாம் தடவையாக ஆளுநர் ஆர்தர் ஹோப் வேண்டுகோளை மறுத்தார். பெயர்களில் ஸ்ரீக்கு பதிலாக திரு-அடைமொழி சேர்க்க, மாநாட்டில் தீர்மானித்து, மக்களைக் கேட்டுக்கொண்டார்.

1943: தந்தை பெரியாரும், – ஆல்பர்ட் அய்ன்ஸ்டினும்_- சமவயது, சமசிந்தனை விஞ்ஞானி என்பதை வெளிப்படுத்தினார். சோதனைக்குழாய் குழந்தை, செல்போன், உணவு மாத்திரைகள், ஆகாயக் கப்பல் (விமானம்), கம்பியில்லாத் தந்தி முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

1944: தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றப்பட்டது.

1945: கருப்புச்சட்டைப் படை அமைத்தார். 29.04.1945இல் முதல் தொண்டராக கலைஞர் மு.கருணாநிதி தம்மைப் பதிவு செய்துகொண்டார்.

1947: ஆகஸ்ட்-15 சுதந்திர நாள் திராவிடருக்குத் துக்க நாள் என அறிவித்தார். அவற்றில் திராவிடர் மாநாடு கூட்டி திராவிட நாட்டுப் பிரிவினை உணர்ச்சி ஊட்டினார்.

1948: கருஞ்சட்டைப் படைக்குத் தடை, தூத்துக்குடி மாநாடு, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம், கைது செய்யப்பட்டார்.

1949: மணியம்மையாரை வாழ்க்கைத் இணையராகப் பதிவு செய்தார்

1951: வடவர் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக கைது: வகுப்புரிமைக்கு ஆதரவாக முதன்முதலாக இந்திய அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.

1952: குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம். ஒரே சிறையில் அண்ணாவும் -அய்யாவும்.

1953: மூடநம்பிக்கை ஒழிய பிள்ளையார் உருவ பொம்மைகள் உடைப்பு.

1955: இந்திய தேசியக்கொடி எரிப்புப் போராட்டத்தை அறிவித்தார்.

1956: ஜாதி ஒழிப்பு – இராமன் பட எரிப்புக்காக கைது செய்யப்பட்டார்.

1957: ஜாதி ஒழிப்பு – சட்ட எரிப்புப் போராட்டம், 3000 பேர் கைது, 6 மாதம்வரை சிறைவாசம். நிலக்கொடை இயக்கத் தலைவர் வினோபா பாவே ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்தார். தஞ்சையில் எடைக்கு எடை வெள்ளி.

1958: பெரியார் – லோகியா சந்திப்பு, உணவு விடுதிகளில் பிராமணாள் பெயர் அழிப்புப் போர்.

1959: வடநாட்டுப் பயணம், இராமாயணக் கண்டனக் கூட்டங்கள்

1960: தமிழ்நாடு நீங்கிய தேசப்படம் எரிப்புப்போர் கைது.

1961: 12.03.1961 அன்று சுயமரியாதை மாநாட்டில் மனுநீதி, கீதை, இராமாயணம் முதலானவை கொளுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

1962: விடுதலை இதழின் ஆசிரியராக கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., அவர்களை (10.08.1962) வரவேற்றார்.

1963: காமராஜர் பதவி விலகுவது தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும், காமராசருக்கும் தற்கொலையாக முடியும் என முன்கூட்டியே தந்திமூலம் அவருக்கு அறிவித்தார்.

1964: நில உச்சவரம்புக்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றக் கண்டன நாள் கூட்டங்கள் நடத்தினார்.

1965: வைக்கம் வீரர் பெரியார், கேரளாவில் 11.03.1965 அழைக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.

1966: நாடெங்கும் இராமாயணம் எரிக்கப்படச் செய்தார்.

1967: அண்ணா முதல்வராகி ஆட்சியைப் பெரியாருக்குக் காணிக்கையாக்குதல்; சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1970: உண்மை இதழ் தொடக்கம்; யுனெஸ்கோ விருது வழங்கிப் பாராட்டியது. பகுத்தறிவாளர் கழகம் எனும் அமைப்பைத் தொடங்கினார். மாடர்ன் ரேஷனலிஸ்ட் எனும் ஆங்கில மாத இதழைத் தொடங்கினார். அறிவியல் அறிஞர் ஜி.டி.நாயுடு அவர்களுக்குத் தந்தை பெரியார் தலைமையில் சிறை திறக்கப்பட்டது.

1971: தமிழ்நாடு சட்டசபையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றம். பெரியார் தலைமையில் திமுகவை ஆதரித்துப் பிரச்சாரம். 183 இடங்களைக் கைப்பற்றி கலைஞர் முதலமைச்சரானார். சேலத்தில் மாநாட்டில் வெள்ளி சிம்மாசனம் பரிசாக பெரியாருக்கு வழங்கப்பட்டது.

1972: பெரியார் மீது செருப்பு, பாம்பு வீசப்பட்ட இடமான கடலூரில் 13.08.1972 பெரியார் சிலையை கலைஞர் திறந்துவைத்தார்.

1973: 95 ஆவது பிறந்தநாள் விழாவில் எம்.ஜி.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பணமுடிப்பை வழங்கினார். சென்னையில் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாடு _ உடல் பாதிப்பு – வேலூர் மருத்துவமனையில் அனுமதி 24.12.1973 அன்று மறைந்தார். சென்னையில் காவல் துறையினரின் வேட்டு முழக்கத்துடன் பெரியார் உடலுக்கு அரசுமுறை அடக்கம் தந்திட கலைஞர் ஆவன செய்தார். சென்னை வேப்பேரியில் பெரியார் திடலில் பெரியார் அவர்களது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அன்றைய தினத்தை அரசு விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அவர்தம் கொள்கைகளைத் அய்யாவின் அடிச்சுவட்டைத் தொடர்ந்து மணியம்மையாருக்குப் பிறகு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் தொடர்ந்து உலகம் முழுவதும் தந்தை பெரியாரின் கொள்கையைப் பறைசாற்றிப் பரப்பி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment